Wednesday, May 7, 2008

பஞ்சாங்கப் பித்தலாட்டம் அம்பலம்

தமிழ் வருடப் பிறப்பு சித்திரையில் தொடங்குவதாகக் கூறிக் கொண்டு, வருடத்தின் மாத, நாள்களோடு மட்டுமின்றி நாழிகை, நல்ல நேரம், கெட்ட நேரம், சகுனம், ராகுகாலம் என்ற மூட நம்பிக்கைகளையும் சேர்த்து - ‘பஞ்சாங்கம்’ தயாரிக்கப்படுகிறது. இந்துக்களின் காலண்டராக, பழமைவாதிகளால் கூறப்படும் பஞ்சாங்கத்தை பல்வேறு சோதிடர்கள் வெளியிட்டு வருகிறார்கள். தமிழக அரசு தை முதல் நாள் தான் தமிழ்ப் புத்தாண்டு என்று அறிவித்த நிலையில், இந்துக் கோயில் இந்த ஆண்டும் சித்திரையிலேயே தமிழ்ப் புத்தாண்டு என்று கூறிக் கொண்டு, விசேட பூசைகளை அறிவித்து வருகின்றன. தமிழக அரசின் கட்டுப்பாட்டிலுள்ள இந்து அறநிலையத் துறையின் கீழ் வரும் கோயில் நிர்வாகம்கூட தமிழக அரசின் முடிவுக்கு மாறாக சித்திரையை தமிழ்ப் புத்தாண்டு என்று அறிவித்துள்ளன.

அந்தக் காலத்திலேயே இந்து மதத்தின் முன்னோர்கள் - வானவியலைக் கணித்து, நாட்காட்டியை உருவாக்கியுள்ளதாக பழம் பெருமையை, பார்ப்பனர்களும் இந்துப் பழமைவாதிகளும் பீற்றிக் கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் இந்த இந்து காலண்டரின் ஓட்டைகள் அம்பலத்துக்கு வந்துள்ளன.

கையில் கட்டியுள்ள கடிகாரம், காலை 8 மணியை காட்டுவதற்கு பதிலாக - இரவு 12 மணியை தொடர்ந்து காட்டிக் கொண்டிருந்தால் அதை நாம் கையில் கட்டிக் கொண்டு, இதுதான் சரியான நேரம் என்று ஊரில் கூறிக் கொண்டிருந்தால் - ஊர் மக்கள் என்ன சொல்வார்கள்? பைத்தியம் பிடித்து விட்டதா என்று கேட்பார்கள். எனது கடிகாரத்தின் நேரம் இரவு 12 மணி தான் என்று காலை 8 மணிக்கு ஒருவன் கூறிக் கொண்டே இருப்பதைப் போல்தான் இந்து காலண்டரான பஞ்சாங்கத்தின் கதையும் இருக்கிறது.

இந்து சோதிடர்களின் விஞ்ஞான அடிப்படையில்லாத தவறான கணிப்புகளால் ஊகத்தால் உருவாக்கப்பட்ட வானவியல் அடிப்படைகள். மிக மோசமான நேரத்தைக் காட்டிக் கொண்டிருக்கின்றன. பருவ காலங்களை வேகம் வேகமாக - கடந்த 60 ஆண்டுகளில் பாய்ச்சல் வேகத்தில் கடந்து போய் விட்டது. ‘இந்து’க்கள் கணித்த நேரம், இதன் விளைவாக - இப்போது 24 நாட்கள் இடைவெளியில் இந்து காலண்டரான பஞ்சாங்கம், தேங்கிப் போய் நிற்கிறது. அதாவது உலகம் முழுதும் ஆகஸ்டு 1 ஆம் தேதி என்றால், இப்போது, பஞ்சாங்கப்படி, ஆகஸ்டு 25 அய் காட்டிக் கொண்டு நிற்கிறது. இந்த பஞ்சாங்கம் - சரியான வழிகாட்டியல்ல என்பதால் 1955 ஆம் ஆண்டு நேரு பிரதமராக இருந்தபோது, இந்திய அரசு மேக்னக் ஷா என்ற புகழ்பெற்ற விஞ்ஞானியின் தலைமையில் குழு ஒன்றை அமைத்தது.

இந்து பஞ்சாங்க காலண்டரை விரிவாக ஆராய்ந்த குழு, தனது அறிக்கையில் “இந்து காலண்டர் என்பது - மனிதர்கள் தங்கள் சிந்தனையின் கற்பனையில் உருவாக்கப்பட்டதால், அதில் ஏராளமான மூடநம்பிக்கைகளையும், அரை உண்மைகளையும் இடைக்காலத்தில் இணைத்துவிட்டார்கள். இதில் பல குளறுபடிகளும், குழப்பங்களும் உள்ளன. இந்தக் குறைகளை துணிவோடு எடுத்துக்காட்டி மாற்றங்களைக் கொண்டுவர - எவருக்கும் துணிவில்லை. 23 நாட்கள் இடைவெளியில் இந்து பஞ்சாங்கம் போய்க் கொண்டிருக்கிறது. கடந்த 1400 ஆண்டுகளாக கொஞ்சம் கொஞ்சமாக ஏற்பட்ட கால இடைவெளி நீண்டு 23 நாட்களாக வந்து நிற்கிறது” என்று கமிட்டி தனது பரிந்துரையில் சுட்டிக் காட்டியதுடன், “தவறுகளும் - மூடநம்பிக்கைகளும் நிறைந்த ‘களஞ்சியத்தை’ நாம் இந்து வாழ்க்கை முறையாக ஏற்றுக் கொண்டு வாழப் பயிற்றுவிக்கப்பட்டு விட்டதால், அதை மாற்ற முடியாத புனிதமாக்கி - பாதுகாத்து வருகிறோம்” என்றும் சுட்டிக்காட்டியது. விஞ்ஞானிகள் குழு - புதிய தேசிய காலண்டர் முறையையும் உருவாக்கியது. ஆனால் - பார்ப்பனர்களும், பழமைவாதிகளும், சோதிடர்களும், இந்த மாற்றத்தை ஏற்காமல், கிடப்பில் போட்டுவிட்டனர்.

உண்மையில் சூரியன் உச்சிக்கு வரும் நாளான - தமிழர் திருநாள் - பொங்கல் நாள் என்று கொண்டாடப்படும் நாள் டிசம்பர் 22 ஆம் தேதியே ஆகும். ஆனால், தவறான கணிப்புகளால் அது ஜனவரி 14 அல்லது 15 ஆம் தேதிக்கு தள்ளப்பட்டுவிட்டது. 1955 இல் 23 நாட்களாக இருந்து, இப்போது 24 நாட்கள் அதிகரித்துள்ள தவறான இடைவெளியில்தான் நாள், நட்சத்திரம், நல்ல நேரம், எதிர்காலம் எல்லாமுமே கணிக்கப்பட்டு வருகிறது. இந்த அடிப்படையிலே சோதிட “மேதைகள்” பத்திரிகைகளில் சோதிடக் கணிப்புகளை அள்ளி வீசிக் கொண்டிருக்கிறார்கள். அதைப் படித்தவர்கள் முதல் பாமரர் வரை படித்து நம்பிக் கொண்டிருக்கிறார்கள்! வெட்கக் கேட்டைப் பார்த்தீர்களா?

(ஆதாரம்: ‘பிரன்ட் லைன்’ இதழில் (மார்ச் 20) பீமன் நாத் என்ற வானவியல் விஞ்ஞானி எழுதிய கட்டுரை)
நன்றி...புரட்சிப்பெரியார் முழக்கம் ஏப்பிரல் 2008
visit www.puratchiperiyarmuzhakkam.com

No comments: