அறிவியல் மனப்பான்மையை மக்களிடம் வளர்க்க வேண்டும் என்பது இந்திய அரசியல் சாசனத்தின் பார்வை. அனைத்து அறிவியலாளர்களும் ஜோதிடத்தின் விஞ்ஞானப் பூர்வ நம்பகத் தன்மை குறித்து எம்மிடம் கேட்டால் அதைக் கண்டிப்பாக மறுப்போம் என்கின்றனர்.
உலகப் புகழ் பெற்ற இந்திய அறிவியலாளர்கள் பலரும், அறிவியல் இயக்கங்களும், சமூக விழிப்புணர்வுக் குழுமங்களும், பகுத்தறிவு இயக்கமும், வானவியல் ஆய்வாளர்களும், சிந்தனையாளர்களும், தத்துவ ஆசிரியர்கள் படைப்பாளிகள் சோதிடம் குறித்த கடுமையான ஆராய்ச்சி செய்தவர்கள் ஆகிய யாவரும் எதிர்ப்பு தெரிவித்த பின்பும் சோதிடப் பாடம் பட்டப்படிப்பு, பட்டயப் படிப்புக்கு ஒரு பாடமாக வைக்கப்பட்டுள்ளது.
உலக நாடுகளின் கல்வி நிறுவனங்கள் யாவும் அண்டத்தை அளக்குமளவிலான முற்போக்குப் பயணம் மேற்கொள்கிற இக்காலத்தில் நம் நாட்டில் மருத்துவம், குடிநீர், அடிப்படைக் கல்விக்கான அடைவுகள் நோக்கிய பயணம் வேகமாக்கப்பட வேண்டிய நிலையில் இருக்க, வேலையின்மை, திறனுக்கு மதிப்பின்மை ஆகிய விரக்திகளால் தன்னம்பிக்கை குறைந்து தற்கொலைச் சிந்தனையின் சின்னங்களாக உலவுகிற இன்றைய, பெரும்பாலான இளைஞர்களுக்கு தன் முயற்சி கூடும் தொழில் முனைவோர், தொழில் வளர்ச்சிகள் நலிந்து கொண்டிருக்க படித்தவர்கள் நிலையிதுவெனில் தன்உழைப்பு முழுவதையும் தன் பாமரத்தன்மையால், மூட நம்பிக்கைகளால் பழமை வாதங்களால் சூடமாய் சாம்பிராணியாய் பலர் எதிர்த்துக் கொண்டிருக்க இதற்கு மாற்றான அறிவியல் உணர்வு வளர்க்கப்பட வேண்டிய காலம் இது.
தன்னம்பிக்கை, சுயமுன்னேற்றத்திற்கான, நேர நிர்வாகம் தொடர்பான பயிற்சிகள் கால, தேச, பிரபஞ்ச வர்த்தமானங்கள் குறித்த நமது மரபு வழியிலான வானவியல் அறிவு, சுய சிந்தனையின் வழி தன்னை தன் ஆன்மச் சூழலை உணரவைக்கிற உளவியல் மெய்ப்பிப்புகள் நிறைந்த பாடல்கள் வரவேற்கத்தக்கது.
தந்தை பெரியார் நூற்றாண்டு கடந்த இச் சூழலில் இப்பகுத்தறிவு யுகத்தில், பிழைப்பு வாதத்திற்காக கணிப்பொறிகளும் ஜாதகம் பார்க்கத் தொடங்கி விட்டன. மக்களது சுய சிந்தனையை, திட்டமிடலை மழுங்க வைக்க காலையிலிருந்தே தொலைக்காட்சிகள் அவையவை ஆளுக்கொரு திசையையும் வாய்க்கு வந்த திசையையும் வாய்க்கு எந்த எண்களையும் ராசியோடு வாரி வழங்குகின்றன.
ஜோசியம் கணிக்கிற நபர் ஒருவர் நாளேடொன்றிற்கு ஒரு வாரம் ராசிபலன் எழுதி அனுப்ப மறந்தால் அந்த ஏட்டின் ஆசிரியர் பழைய வாரப் பத்திரிகைகளை எடுத்து அவசரத்திற்கு வெளியிட அதற்கும் பல வாழ்த்து மடல்கள் வந்ததாகச் சொன்ன வரலாறுகள் நாம் அறிந்ததே.
இப்படியாக சோதிடம் என்பதே, கற்பனை, பொய் என்பதற்கான அறிவியல் வழியிலான சான்றுகளைச் சோதிடர்களின் கூற்றுகளை நடை முறைகளைக் கொண்டே நிறுவ முடியும்.
(எ.கா.) சோதிட முறைப்படி கோள்கள் பன்னிரண்டு. ஆனால் உண்மையில் கோள்கள் ஒன்பது. பிறந்த நேரம் கோள்களின் அமைப்பு இவை யாவும் ஒவ்வொரு தனி மனிதனுக்கும் வாழ்க்கை மாறுபாடுகளை ஏற்படுத்தும் எனச் சொல்லி அப்பட்டமாக ஏமாற்றுவது ஊழ்க்கோட்பாடு (விதி) என்பதான பெயரில் சிந்திக்க மறுக்கிற சமூகத்தை உருவாக்கி விடும். அவலத்திற்குரிய செய்தி யாதெனில் குழந்தை பிறப்பு கூட தற்போது நல்லநேரம், காலம் என்பதாகக் கூறி இயல்பாகப் பிறக்கும் நிலையிலும் கூறி இயல்பாகப் பிறக்கும் நிலையிலும் கூட அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு குறிப்பிட்ட நாள், குறிப்பிட்ட நேரத்தில் குழந்தை பிறக்கச் செய்வதை உலகம் காண்கிறது. இப்பேரண்டத்தின் இயக்கம், கோள் நிலை மாறுபாடுகள் இவற்றால் புவியல் உள்ள ஒட்டு மொத்த உயிரினங்களுக்கும் ஏதேனும் விளைவுகள் ஏற்படுமே தவிர (சான்று: காஸ்மிக் கதிர்கள்) ஒவ்வொரு தனி மனிதனுக்கும் இன்னின்ன விளைவுகள் ஏற்படும் என்பது உண்மையல்ல என உருசிய நாட்டு அறிவியலாளர்கள் கூறுகின்றனர்.
உலகத்தை உள்ளங்கையில் அடக்குகிற தகவல் தொழில் நுட்ப ஊழிக்காலத்தில் உன் உள்ளங்கை ரேகையில்தான் வாழ்க்கையே இருக்கிறது என்று சொல்லுகிற சோதிடத்தை அண்மையில் நேபாள மன்னர் குடும்பக் கொலைகள் பொய்யென்று காட்டின.
முன்பு கிருஷ்ணதேவராயரின் வாழ்நாள் இவ்வளவு என்று (சோதிடம்) கூறிய ஆருடனுக்கு நிலமும் பொன்னும் கொடுக்க, சொன்னவனை அழைத்து, உன் ஆயுள் காலம் எவ்வளவு? எனக் கேட்டு அவனை அக்கணமே வெட்டிச் சாய்த்து அச்சோதிடம் பொய்யென உணர்த்திய தெனாலிராமன் கதை நிலவிய சமூகம் இது.
அண்ணனுக்கு அரசு தந்து, அன்றே துறவறம் பூண்டு சோதிடத்தைப் பொய்ப்பித்த ஊழ்வினை உறுத்து வந்தூட்டும் என்று சொல்லி ஊழுக்குப் புது விளக்கம் தந்த சிலம்பாசான் இளங்கோவடிகள்.
இப்படியான வரலாறு படித்த இளைஞர்களை எதிர் காலச் சோதிடர்களே வாருங்கள்! என கல்வி நிறுவனங்கள் அழைக்கத் தொடங்கியிருப்பது கவலைக்குரியது. ஆன்மீக ரீதியாகப் பார்ப்பினும் சிறுதெய்வ வழிபாடாயினும் பெருந்தெய்வ வழிபாடாயினும் இறையுணர்வொன்றே தன்னம்பிக்கைக்கு ஊன்று கோலாகவும் உளவியல் ரீதியான பாதுகாப்பு உணர்வையும் நல்குமென்பதை, ஞாயிறு திங்கள் செவ்வாய் . சனி பாம்பிரண்டுடனே... ஆசறு நல்ல நல்ல அவை நல்ல அடியாரவர்க்கு மிகவே என்று திருமுறை சுட்டுமாப்போல அவரவர் இறை என்ற உயர் சக்தியோடு, சக்தியை நினைந்து இயங்கும்போது இடையில், அண்மைக் காலத்தில் மிகவும் அச்சமூட்டு வதாகவும், வணிகம் போலவும் பெருகிவிட்ட இந்த நவகிரக வழிபாடு அது குறித்த பரிகாரங்கள் என்பவை யாருடைய நலனுக்கானவை என்பது சிந்திக்கத் தக்கதாகின்றது.
இயல்பான அறிவுடைய ஒரு மனிதராய் அறிவியலாளியாய் மதுரை காமராசர் பல்கலைக்கழகப் பேராசிரியர் கே. ராஜு அவர்கள், ஒரு விஞ்ஞான ஆசிரியர் என்ற முறையில் எனது கவலை இதுதான். ஹைட்ரஜனும் ஆக்ஸிஜனும் ஒரு குறிப்பிட்ட முறையில் சேர்ந்தால்தான் தண்ணீர் ஆகும் என்றால் அதைச் சோதித்துப் பார்க்கிற யாருக்கும் ஒரே மாதிரியான விடை கிடைக்கும். ஆனால் நூறு சோதிடர்கள் ஒரே ஜாதகத்தை ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகக் கணிக்கிற கூத்துதான் நடக்கிறது. இதில் யாருடைய கணிப்பைக் கொண்டு போய் பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கு போதிக்கும்? நூறு கோடி மக்களுக்கும் பல்வேறு நம்பிக்கைகள் உண்டு. இவையெல்லாம் பாடமாக வைப்பது அவசியம்தானா? என்று வினா எழுப்புகிறார்.
தங்களிடம் வருபவர்களின் மனநிலையறிந்து அதற்கேற்ப ஆறுதலும், அவர்களுக்கு தற்காலிக மகிழ்ச்சியையும் மன நிறைவையும் சொல் ஜாலத்தால் ஏற்படுத்தி அவர்களது இயலாமையை முதலாக்கி பரிகாரம் ஏதாவது சொல்லி இயன்றவரை பணம் பறிப்பது எமது தொழில் ரகசியம் என்பது சோதிடர்களே ஒத்துக் கொள்கிற ஒன்று. ஒன்றுமற்ற இதனை பாடமாக்க, அதை மாணவர்கள் படிக்க, நாளைக்கு அவர்களும் கட்டாயம் அங்கீகாரம் பெற்ற நவீனப் புரோகிதர்களாகத் தான் அலையவேண்டி வரும். இசுலாமிய, கிறித்துவ இதர சமயத்தார் பெற்றிருக்காத ஜாதகம், ராசி, நட்சத்திரம் இவை பற்றிய இப்படிப்பினை எவ்வளவோ அடிப்படை அறிவியல் துறைகள் விரிவுபடுத்த வேண்டிய சூழலில் கொணர்வது தொழில் நுட்ப யுகத்திற்கான அடையாளமா? என அய்யுறவேண்டி இருக்கிறது. இதைப் படித்துவிட்டு நாளைக்கு ஓர் ஆசிரியராக வரக்கூடியவர், தன் மாணவனின் ஜாதகம் பார்த்து நீ தேருவாய், நீ தேரமாட்டாய் என்று கைராசி பார்க்கக் கூடும்.
மாவட்ட ஆட்சியாளராய் வரக்கூடியவர் இங்கே இருக்கும் குடிநீர்ப் பிரச்சினைக்கு வாஸ்து சாஸ்திரமே காரணம். எனவே யாகம் வளருங்கள் என்று சொல்லக் கூடும். மேலும் இது இன்று வளர்ந்து வரும் பெண்ணியத்திற்கு முரணானது. ஏற்கெனவே தோஷம், ஜாதகப் பொருத்தம் இப்படியானவற்றால் முதிர் கன்னிகள் பெருக, இதன் மூலம் மீண்டும் பெண்ணடிமைத்தனத்திற்கே இந்த ஆணாதிக்க சமூகம் வழிகோலும். அன்றே தன்னோர் செய்யும் புரோகிதம் என் தொழிலல்ல எமக்குத் தொழில் கவிதை என்று சொன்ன நம் தோழன் பாரதியின் அக்கினிக் குஞ்சுகளாய் அறிவுத் திறன் கொண்டு மடமையைக் கொளுத்துவோம்.
--------------------நன்றி: தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்களை ஆசிரியராகக் கொண்ட "அறிக அறிவியல்", ஜூலை 2009 இதழிலிருந்து...
Friday, July 17, 2009
Subscribe to:
Posts (Atom)